புதிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாநில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு மனுத்தாக்கல்: விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

புதுடெல்லி: 2018ம் ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாநில ஒதுக்கீட்டை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. இது வரும் 17ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் தங்களின் மாநில ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில்  அவர்கள், ‘‘2017ம் ஆண்டு பின்பற்றப்பட்ட மாநில ஒதுக்கீடு கொள்கை நியாயமில்லாதது, முரணானது. சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கேட்கப்பட்ட இடங்கள் ஒதுக்கீடு  செய்யப்படவில்லை. அந்த இடங்கள் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எனவே தேர்வு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, ெமரிட் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட முன்னுரிமை  அடிப்படையில் மாநிலங்கள் ஒதுக்கீடு செய்து புதிய பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2018ம் ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய கொள்கை அடிப்படையில் மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை ரத்து செய்தது. கம்ப்யூட்டர் மூலம் எலக்ட்ரானிக் முறையில் இடங்கள்  ஒதுக்கீடு செய்யப்படுவதால், மீண்டும் புதிய பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு அதிக நேரம் ஆகாது என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்தது. இதை அவசரமாக விசாரிக்கும்படி நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வில் கூறப்பட்டது. மத்திய அரசு  சார்பில் நேற்று ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ‘‘2018ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சியில் உள்ளனர். அவர்கள் விரைவில் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு செல்லவுள்ளனர்.  இந்த நேரத்தில் பட்டியலை மாற்றி புதிதாக தயாரிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது’’ என குறிப்பிட்டார். இதுகுறித்து வரும் 17ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories: