இந்தியாவில் கிளையை தொடங்கியதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக தனது கிளையை நிறுவியிருப்பதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு அரேபிய மொழியில் ஸ்ரீவிலாயா ஆப் ஹிந்த்’ என பெயரிடப்பட்டிருப்பதை அமாக் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப் படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்-நஸ்‌ரா முன்னணி அமைப்பும் அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் இணைந்து கடந்த 2013ம் ஆண்டின் இறுதியில் ஐஎஸ் என்ற புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்கின.

சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்த அமைப்பு, 2014ல் ஈராக்கின் பலுஜா, மொசூல் நகரங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஏறக்குறைய 30,000 பேர் இத்தீவிரவாத அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால் ஈராக்கில் இதன் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டதால், உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை வலுப்படுத்தும் ரகசிய முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே தான், கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக தனது கிளையை தொடங்கி உள்ளதாகவும் அதற்கு அரேபிய மொழியில் ஸ்ரீவிலாயா  ஆப் ஹிந்த்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஐஎஸ் தீவிரவாத  அமைப்பு அமாக் செய்தி நிறுவனம் மூலம் தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: