அமைச்சு பணியாளர் சங்க தேர்தலுக்கு ரத்து கேட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் திடீர் பல்டி: பதிவுத்துறையில் பரபரப்பு

சென்னை: அமைச்சு பணியாளர் சங்க தேர்தலுக்கு ரத்து கேட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் திடீரென பல்டி அடித்து இருப்பது பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் உள்ள இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஊழியர்கள் நலன் கருதி தமிழ்நாடு பதிவுத்துறை அமைச்சு பணியாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இந்த சங்கம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்டது.

இந்த அரசு அலுவலர் ஒன்றியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பதிவுத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தை கலைத்தது. தொடர்ந்து அந்த சங்கத்திற்கு தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாடு பதிவுத்துறை அமைச்சு பணியாளர் சங்க அமைப்பாளராக வாசுதேவனை நியமனம் செய்தது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு தரப்பு அமைச்சு பணியாளர் சங்க தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்தியது. இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு தமிழக அரசு அலுவலர் ஒன்றியம் கடிதம் எழுதியது. அதன்பேரில் பதிவுத்துறை ஐஜி விசாரணை நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் அங்கீகாரத்தை பெற்று வருமாறு அறிவுறுத்தினார்.

 

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரனுக்கு திடீரென கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது. அதில், ‘தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் நலன்கருதி மு.வீரக்குமார் தலைமையிலான நிர்வாகிகளை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்பு சங்கமான தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சு பணியார் சங்கத்தின் நிர்வாகிகளை அங்கீகரிப்பது என முடிவு செய்துள்ளோம். எனவே, தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தை அங்கீகரித்து செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: