பிரமாண்ட சிலை பயணத்திற்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு

ஓசூர்:   கர்நாடக மாநிலம் ஈஜிபுராவிலுள்ள கோதண்டராமர் கோயிலில், நிறுவுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை என்னுமிடத்தில் ஒரே கல்லில் 64 அடி உயரம், 24 அடி அகலத்தில் சுமார் 400 டன்  எடையில் வடிவமைக்கப்பட்ட சிலையை, கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றி புறப்பட்டனர். பல்வேறு தடைகளை தாண்டி கடந்த பிப்ரவரி ம் 9ம் தேதி கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளத்தை வந்தடைந்தது. அந்த பகுதியில் சுமார் 3 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெருமாள்  சிலை கடந்த 3ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ஓசூர் நோக்கி புறப்பட்டது.

தொடர்ந்து சூளகிரி, சப்படி, கோனேரிப்பள்ளியை தாண்டி 9ம் தேதி கோபசந்திரத்தை கடந்து பேரண்டப்பள்ளி வந்து சேர்ந்தது. அங்கு தென்பெண்ணை ஆற்று பாலத்தை கடக்க முயன்றபோது, லாரி டயர் மண்ணில் சிக்கியதால்  பயணத்தில் தொய்வு ஏற்பட்டது. நேற்று 3வது நாளாக அப்பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்ததும் தென்பெண்ணை ஆற்றை  கடந்து ஓசூர் நோக்கி சிலையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து தற்போது 195 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது  கிருஷ்ணகிரி அணைக்கு செல்கிறது. இதையடுத்து, ஆற்றின் குறுக்கே மண்சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

Related Stories: