‘தமிழிலும் தகராறு, ஆங்கிலமும் வெகுதூரம்’ தமிழகத்தில் வாசிப்பு திறன் குறைந்த அரசுப்பள்ளி மாணவர்கள்

* என்ன செய்யப்போகிறது அரசு? கேள்வியெழுப்பும் கல்வியாளர்கள்

வேலூர்: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் வாசிப்புத்திறன், கற்றல் திறன் குறைவாக இருப்பதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ‘கட்டிடம் ஸ்ட்ராங்கு, ஆனா, பேஸ்மென்ட் வீக்கு’ என்ற காமெடி டயலாக்கை ஒரு படத்தில் நாம் பார்த்து ரசித்திருக்கலாம். இந்த காமெடி டயலாக் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வியின் நிலைக்கு நிச்சயம் பொருந்தும். இது அரசு பள்ளிகள் மட்டுமல்ல, தனியார் ஆங்கில வழி பள்ளிகளையும் சேர்த்தே நாம் தைரியமாக சொல்லலாம். இன்று உயர்நிலைப்பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படிக்கும் எந்த மாணவனை அழைத்து தமிழை பிழையின்றி எழுத முடியுமா? ஆங்கிலத்தில் பேச முடியுமா? என்று கேட்டால் பதில் கிடைக்காது. இதையறிந்த தொடக்கக்கல்வி இயக்குனரகம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வாசிப்பு திறன் தொடர்பாக, மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்துமாறு, கல்வித்துறை அலுவலர்களுக்கு, உத்தரவிட்டது.  அதன்படி, இந்த ஆய்வு்ம் நடத்தப்பட்டது. எளிமையான கேள்விகள் கொண்ட வினாத்தாள் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு முன்சோதனை தேர்வு நடத்தப்பட்டது. அதில், 70 சதவீத மாணவர்களின் வாசிப்பு திறன் மட்டுமின்றி கற்றல் திறனிலும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதை கருத்தில் கொண்டுதான் 2018-19ம் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுக்கு முன்னதாக கற்றல் திறன் குறைந்த மாணவர்களை தனியாக பிரித்து அவர்களுக்கு வாசிப்புத்திறனுடன், சிறப்பு கற்றல் வகுப்புகளும் எடுக்கப்பட்டன. இது அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கே தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் குறைவாக இருப்பதை உறுதி செய்தது. எனவே, தமிழக அரசு முதலில் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தாய் மொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். அதோடு கணக்கு, அறிவியல் பாடங்களிலும், முன்பு போல சமூக அறிவியலை பிரித்து வரலாறு, புவியியல் என்ற பாடங்களை கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் முதல் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுவதுடன், அவர்கள் அகில இந்திய தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்வதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான நிலையை ஏற்படுத்தும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

இதுதொடர்பாக கல்வியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, ‘பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது என்றாலும், பள்ளிகளில் ஒருங்கிணைப்பு மிக அவசியம். குறிப்பாக அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர்கள் இடையே ஒருங்கிணைந்த பங்களிப்பு தேவை. அதோடு பெற்றோர்களின் ஒருங்கிணைப்பும் அவசியமானது. அதேபோல் ஆசிரியர்-மாணவர் உறவிலும் சீரற்ற நிலை காணப்படுகிறது. இதனையும் போக்க வேண்டும். தற்போது ஆந்திராவில் அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் மட்டுமே தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தையும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தலாம். குறைந்தபட்சம் அரசுப்பள்ளிகளை காப்பாற்றவும், ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை நிலைத்திருக்க செய்யவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பதை விதியாக்க வேண்டும். அப்போதுதான் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு முழுப்பலன் கிடைக்கும்’ என்றனர்.

சமுதாய ரீதியிலான பாகுபாடு?

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்கள் மத்தியில் சமுதாய மாறுபாடோ, பாகுபாடோ இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது இந்த பாகுபாடு நிலவுகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் பல அரசுப்பள்ளிகளில் வெளிப்படையாகவே ஆசிரியர்கள் சமூக ரீதியிலான கருத்து மோதல்களில் ஈடுபடுகின்றனர். இதுவே பொதுத்தேர்வுகளில் வேலூர் மாவட்டத்தின் தேர்ச்சி வீத சரிவில் எதிரொலிக்கிறது என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஒருவர். அதற்கு உதாரணமாக வேலூர் நகரின் தெற்கு கோடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று 85 முதல் 90 சதவீதம் வரை 10, 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி வீதத்தை காட்டியது. ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் சமுதாய ரீதியிலான பிரச்னையால் 60 சதவீதத்துக்கும் கீழே சரிந்ததை சுட்டிக்காட்டுகின்றார் அந்த ஆசிரியர்.

Related Stories: