சூளகிரியில் அதிகாலையில் பரபரப்பு அரசு மேல்நிலை பள்ளியில் பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமை ஆசிரியர் அறையில் ஆவணங்கள், பதிவேடுகள் எரிந்து நாசம்

சூளகிரி: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டு இருந்த ஆவணங்கள், பதிவேடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 150 ஆண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 60 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில், பள்ளியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் அறையில் இருந்து நெருப்புடன் கரும்புகை பரவியது. தகவலறிந்து சூளகிரி போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தலைமை ஆசிரியர் அறையில் 10 பீரோவில் இருந்த அனைத்து ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமாகின.

மேலும் வெடிச்சத்தத்தின் அதிர்வால் அறையின் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. தலைமை ஆசிரியர் அறையையொட்டி கழிவறை உள்ளது. இந்த கழிவறையின் ஜன்னலை உடைத்த மர்மநபர்கள், அவ்வழியாக  நுழைந்து இந்த நாச வேலையை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி நாச வேலையில் ஈடு பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். நாச வேலையில் ஈடுபட்ட கும்பல் குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.  மாவட்ட திட்ட கல்வி அலுவலர் நாராயணன், மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகிேயார் நேற்று தலைமை ஆசிரியர் அறை மற்றும் கழிவறை பகுதிகளை ஆய்வு செய்தனர். அதிகாலையில் அரசு பள்ளியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: