ஒப்புகை சீட்டை சரி பார்ப்பதால் தேர்தல் முடிவு வெளியாக ஒருநாள் தாமதம் ஆகலாம்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டபேரவை தொகுதியிலும், ஒரு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை, ஒரு விவிபேட் ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை 5 ஆக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 8ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்து விட்டது.

மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி காலை தொடங்குகிறது. வழக்கமாக அன்று மாலைக்குள் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் தெரிந்து விடும். இந்த முறை விவிபேட் இயந்திரங்களின் பதிவுகள் சரிபார்க்கப்பட உள்ளதால், முடிவுகள் அறிவிப்பது தாமதம் ஆகலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்குப்பின், விவிபேட் இயந்திரங்களை சரி பார்ப்பதா அல்லது வாக்குச்சாவடி வாரியாக விவிபாட் பதிவுகளை சரிபார்ப்பதா என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வாக்கு எண்ணிக்கைக்குப்பின் விவிபேட் பதிவுகள் சரி பார்க்கப்பட்டால், முழுமையான தேர்தல் முடிவு வெளியாக ஒருநாள் தாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது.

Related Stories: