வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து திருநங்கை பாரதிகண்ணம்மா தொடர்ந்த வழக்கு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, திருநங்கை பாரதிகண்ணம்மா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், வருகிற மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில், மதுரை மகால் சாலையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா சுயேட்சையாகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து கடந்த 23ம் தேதி திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனுவை தேர்தல் அலுவலர் நிராகரித்தார். பாரதி கண்ணம்மாவின் வேட்புமனு சரியாக முன்மொழியப்படாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து திருநங்கை பாரதிகண்ணம்மா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் விதிப்படி வேட்புமனுவில் 2 பி படிவம் மற்றும் படிவம் 26ல் பூர்த்தி செய்யப்படாத இடங்களைப் பூர்த்தி செய்வது தொடர்பாக வேட்பாளருக்குத் தேர்தல் அலுவலர் தகவல் தெரிவிக்க வேண்டும். எனது 2 பி படிவத்தில் பூர்த்தி செய்யாமல் விடப்பட்டுள்ள இடங்களைப் பூர்த்தி செய்வது தொடர்பாக தேர்தல் அலுவலர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதிலுள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய அவகாசம் வழங்குமாறு தேர்தல் அலுவலரிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் எனக்கு போதிய வாய்ப்பு வழங்காமல் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார்.

இதனால் என் வேட்புமனுவை நிராகரித்து தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மே 19ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய நிலையில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. தேர்தல் முடிந்ததும் மனுதாரர் தேர்தல் வழக்காகத் தாக்கல் செய்யலாம் என்று கூறிய நீதிபதிகள், திருநங்கை பாரதிகண்ணம்மாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: