ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம்..: கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு ஜாமின் வழங்க நாமக்கல் நீதிமன்றம் மறுப்பு

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு ஜாமின் வழங்க நாமக்கல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து ராசிபுரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அமுதா என்ற விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் பல வருடங்களாக குழந்தைகளை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமுதா(எ)அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன், ஹசீனா, அருள்சாமி, லீலா, செல்வி ஆகிய 8 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விரிவான விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கானது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இவர்கள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் புரோக்கர் அருள்சாமி ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் 3 பேரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று மாலையே விசாரணைக்கு வந்தது. இதையொட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமுதவள்ளி, முருகேசன் மற்றும் அருள்சாமி ஆகியோரை போலீசார் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதிபதி கருணாநிதி, கைதான அமுதவள்ளியை 2 நாட்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் புரோக்கர் அருள்சாமி ஆகியோரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசிய இடங்களில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 6ம் தேதி செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தரகர்கள் லீலா, பர்வீன், ஹசீனா ஆகிய 5 பேர் ஜாமின் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த 5 பேருக்கும் ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை அழிக்க முயற்சிப்பர். மேலும், இவர்களிடம் இன்னும் விசாரணை நடத்தி முடிக்கப்படவில்லை. எனவே, இவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, 5 பேரின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: