பிரதமர் மோடி, அமித்ஷா மீதான விதிமீறல் புகார் தேர்தல் ஆணைய நற்சான்று நகலை தாக்கல் செய்ய காங். எம்பிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டில் பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய நற்சான்று நகலை தாக்கல் செய்ய காங்கிரஸ் எம்பிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது ஜாதி, மதம், ராணுவம், பாதுகாப்பு துறைகளை சம்மந்தப்படுத்தி பேசக்கூடாது என்பது நடத்தை விதிகள். ஆனால், பிரதமர் மோடியும், பாஜ தலைவர் அமித்ஷாவும் தொடர்ச்சியாக ராணுவத்தையும், மத  ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வகையிலும் பிரசாரத்தில் பேசி வருவதாக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் 40 புகார்கள் தரப்பட்டன. இதில், லத்தூரில் பிரதமர் மோடி, ‘‘முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பாலகோட் விமான தாக்குதல் ஹீரோக்கள் மற்றும் புல்வாமாவில் பலியான வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்’’ என பேசியதும், வார்தாவில்  ‘‘சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலேயே வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடுகிறார்’’ என்று பேசியதும் நடத்தை விதிமுறை மீறல் இல்லை என தேர்தல் ஆணையம் நற்சான்று வழங்கியது.

இதையடுத்து அசாம் மாநிலத்தின் சில்சார் தொகுதி காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, காங்கிரசின் புகார்கள்  குறித்து தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை தொடர்பாக மே 6ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சிங்வி ஆஜராகி, ‘‘எங்களின் 6 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்திலும் தேர்தல் நடத்தை  விதிமுறை மீறல் இல்லை என நற்சான்று அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் 5 உத்தரவுகளில் 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த எதிர்ப்புக்கான காரணத்தை எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. எனவே,  தேர்தல் ஆணையம் வழங்கிய நற்சான்று உத்தரவின் நகலை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, ‘‘வழக்கின் விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: