பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் வேலூர் மாவட்டத்தை இரவில் குளிர்வித்த மழை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பகலில் சுட்டெரித்த வெயில், இரவில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிகபட்சமாக வேலூரில் 53.4 மி.மீட்டர் பதிவானது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக 110 டிகிரி வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று 110.5 டிகிரியாக வெயில் பதிவானது. இதனால் பகல் நேரத்தில் முக்கிய சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்ததே காணப்பட்டது. மேலும் வெயில் இருந்த தப்பிக்க பொதுமக்கள் நீச்சல்குளம், குளிர்பான கடைகளை தேடி சென்றனர். இந்நிலையில், நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் திடீரென மழைபெய்யத்தொடங்கியது. வேலூர் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். அதேபோல் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, திருவலம், அரக்கோணம், சோளிங்கர், வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. திடீர் மழையால்  அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். அதிகபட்சமாக வேலூரில் 53.4 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்றிரவு பெய்த மழையால் சோளிங்கர் ஓட்டனேரி கிராம ராமர் கோயில் தெருவில் வசித்து வரும் சிவக்குமார் என்பவரின் வீட்டு சிமெண்ட் மேற்கூரை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. அதேபோல், அப்பகுதியை சேர்ந்த குட்டிசண்முகம் என்பவரின் வீட்டில் வளர்த்து வந்த கன்றுக்குட்டி உயிரிழந்தது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு மி.மீட்டரில்: வேலூர் 53.4, ஆம்பூர் 4, ஆலங்காயம் 17, சோளிங்கர் 9, திருப்பத்தூர் 1.1, ஆற்காடு 1, குடியாத்தம் 10, மேலாத்தூர் 11.8, பொன்னை மேடம் 5, நாட்றம்பள்ளி பொதுப்பணித்துறை 2.6, காட்பாடி ரயில்வே நிலையம் 23, அம்முண்டி சர்க்கரை ஆலை 3.2 மழை பதிவானது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 141.10 மி.மீட்டராகும். சராசரி மழையளவு 7.80 மி.மீட்டராக பதிவானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: