தாம்பரம் பகுதியில் நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் திரியும் கொள்ளையர்கள்: பீதியில் பொதுமக்கள்

தாம்பரம்: தாம்பரம், ஜெருசலம் நகர், சர்ச் தெரு பகுதியில் கடந்த 30ம் தேதி நள்ளிரவில் சிவா என்கின்ற காளிதாஸ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த 2 கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 5 சவரன் நகை ₹20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளையர்கள் கையில் கத்தியுடன் அந்த பகுதியில் சுற்றி வந்து பூட்டிய வீடுகளை நோட்டம் விட்டு கொள்ளையடிக்கும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. கத்தியுடன் திரியும் கொள்ளையர்களால் அப்பகுதி பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஜெருசலம் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரு நாய்களை மர்ம ஆசாமிகள் விஷம் வைத்து கொன்று விட்டனர். இந்நிலையில் நகரின் பல பகுதிகளில் பாதுகாப்பிற்கு சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. கையில் பட்டாக் கத்தியுடன் வரும் மர்ம நபர்கள் நள்ளிரவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நகரில் பல வீடுகளில் முதியவர்கள் தனியாக வசிக்கின்றனர். பணம், நகை கொள்ளை போனால் கூட திரும்ப பெறலாம். ஆனால் இந்த கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்?.தாம்பரம் - முடிச்சூர் சாலையில் உள்ள தாம்பரம்-மதுரவாயல் மேம்பாலம் அருகில் அரசு மதுபானக்கடை உள்ளது. இங்குள்ள பார் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதனால் இங்கு பல பகுதிகளில் இருந்து குடிமகன்கள் மது அருந்துவதற்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு மது அருந்துவதற்காக வருபவர்கள் குடிபோதையில் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றனர்.எனவே இப்பகுதியில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களுக்கு இப்பகுதியில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களே காரணம். போலீசாரும் பணம் பெற்றுக்கொண்டு 24 மணி நேரமும் பார் நடத்த அனுமதிக்கின்றனர். எனவே இதுகுறித்து போலீசார் உடனடிநடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் சுற்றித் திரியும் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: