வெனிசுலாவில் அதிபர் மதுரோவுக்கு எதிராக பயங்கர கலவரம்

கரகாஸ்: வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் கலவரம் வெடித்தது.வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த 2013ம் ஆண்டு முதல் நிக்கோலஸ் மதுரோ இருந்து வருகிறார். அங்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், கடந்தாண்டு நடந்த  அதிபர் தேர்தலில் முறைகேடான வழியில் மதுரோ வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ குற்றம் சாட்டினார். இதனால், அரசியல்சாசனப்படி நான் தான் பொறுப்பு அதிபர் என கடந்த ஜனவரி 23ம் தேதி அவர் அறிவித்தார்.  இவரது போராட்டத்துக்கு அமெரிக்கா உட்பட 50 நாடுகள் ஆதரவாக உள்ளன.  ராணுவத்தினரும் தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என குவைடோ வேண்டுகோள் விடுத்து வந்தார்.

இந்நிலையில், மதுரோவுக்கு எதிராக தலைநகர் கரகாசில் உள்ள விமான படைதளம் அருகே மிகப்பெரிய போராட்டத்தை நேற்று முன்தினம் குவைடோ நடத்தினார்.

இதில், ராணுவத்தினரும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். இதை  ஏற்று ராணுவத்தினர் சிலர் தங்கள் கையில் நீல நிற பட்டை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகின. வீட்டு காவலில் இருந்த மற்றொரு எதிர்க்கட்சி தலைவர் லியோபோல்டோ லோபஸையும் ராணுவத்தினர்  வீட்டு காவலில் இருந்து விடுவித்தனர். அவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் பயங்கர கலவரம் வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஆனால் ராணுவத்தினர் மூலம் இந்த வன்முறையையும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியையும் முறியடித்து விட்டதாக அதிபர் மதுரோ கூறியுள்ளார். அதிபரின் ஆதரவு ராணுவப் படையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை  வீசினர். இந்த போராட்டத்தில் 69 பேர் காயம் அடைந்தனர். இருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: