சிட்னி: இந்தியாவின் சொதப்பல் பீல்டிங் காரணமாக ஆஸி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன் அடித்து முதல் இன்னிங்சை வலுவாக தொடங்கியுள்ளதுஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி முதலில் இந்தியாவை பந்து வீச பணித்தது. ஆஸி அணியில் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் நீக்கப்பட்டு மீண்டும் டேவிட் வார்னர், அறிமுக வீரர் வில்லியம் புகோவ்ஸ்கி(22) ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தொடக்க ஆட்டக்காரர்களாக புகோவ்ஸ்கி, வார்னர் களம் இறங்கினர். சிராஜ் வீசிய 4வது ஓவரின் 3வது பந்தை அடிக்க முயன்றார் வார்னர். பேட் விளிம்பில் பட்ட பந்து முதல் சிலிப்பில் நின்ற புஜாரா கையில் தஞ்சம் புகுந்தது. அதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு களம் கண்ட வார்னர் 5ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். வார்னர் வெளியேற இந்திய வீரர்கள் உற்சாகமானார்கள். இடையில் மழை வந்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது ஆஸி 7.1ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21ரன் எடுத்திருந்தது. சுமார் மூன்றரை மணி நேரம் ஆட்டம் தடைப்பட்டது. அதன் பிறகு தொடங்கிய ஆட்டத்தின் போக்கும் மாறியது. மழைக்கு பிறகு மார்னஸ் லாபுஷேன்-புகோவ்ஸ்கி இணை பொறுப்புடன் விளையாடியது. கூடவே இந்தியா பீல்டிங்கில் சொதப்பியதால் ரன் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. அதனால் புகோவ்ஸ்கி 3முறை கண்டம் தப்பினார். அதை பயன்படுத்திய புகோவ்ஸ்கி அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசினார். அறிமுக வீரர் நவதீப் சைனி(23) ஆட்டத்தின் 31வது ஓவரை வீச வந்தார். அவர் 35வது ஓவரில் புகோவ்ஸ்கியை டபிள்யூ செய்தார். ஆனால் அதை ஏற்காத புகோவ்ஸ்கி, தானாக 3வது நடுவரிடம் ‘மறுபரிசீலனை’ கோரினார். அவரும் ‘அவுட்’தான் என்றதால் புகோவ்ஸ்கி 62ரன்னில் வெளியேறினார். அதனால் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சைனி முதல் விக்கெட்டை எடுத்தார். புகோவ்ஸ்கி-லாபுஷேன் இணை 2வது விக்கெட்டுக்கு 100ரன் சேர்த்தது.அதன் பிறகு களம் புகுந்த ஸ்மித் கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாடினார். பும்ரா வீசிய 36வது ஓவரில், இந்த தொடரின் முதல் பவுண்டரியை அடித்தார். பொறுப்புடன் ஆடிக் ெகாண்டிருந்த லாபுஷேனும் அரை சதத்தை கடந்தார். இந்த இணையை பிரிக்க ஜடேஜாவும் பந்து வீச வந்தார். ஆனால் பலனளிக்கவில்லை. அதற்குள் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸி 55 ஓவருக்கு 2 விக்கெட்களை இழந்து 166 ரன் எடுத்திருந்தது. லாபுஷேன் 67*, ஸ்மித் 31* ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் சிராஜ், சைனி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இன்னும் 8 விக்கெட்கள் கைவசம் இருக்க, சற்றே வலுவான நிலையில் உள்ள ஆஸி தனது முதல் இன்னிங்சை இன்று தொடர்ந்து விளையாடும்.’புது தொப்பி; புது வீரர்’சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் 299வது வீராக நவ்தீப் சைனி அறிமுகமானார். அவருக்கு இந்திய அணிக்கான தொப்பியை பும்ரா வழங்கினார். அதேபோல் ஆஸி டெஸ்ட் அணிக்காக 460 வீரராக அறிமுகமான வில்லியம் புகோவ்ஸ்கிக்கு, தொப்பியை முன்னாள் வீரரும், துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு வழங்கினார். வழக்கமாக ஆஸி வீரர்கள் அறிமுகமாகும் போது, அரங்கில் அவர்களது குடும்பத்தினர் இருப்பார்கள். அதற்காக அவர் குடும்பத்தினர் 14 நாட்களாக மாநில எல்லையில் உள்ள ஓட்டலில் குவாரன்டைனில் உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் அவர்களுக்கு அனுமதி வாய்ப்பு கிடைக்கவில்லை.’3 முறை கண்டம்… 3 ரன்னால் உச்சம்…’ஆஸி அறிமுக வீரர் புகோவ்ஸ்கி 3முறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். அஸ்வின் வீசிய 22வது ஓவரிலும், சிராஜ் வீசிய 27வது ஓவரிலும் புகோவ்ஸ்கி அடித்த பந்துகளை கேட்ச் பிடிக்காமல் விக்கெட் கீப்பர் ரிஷப் தவற விட்டார். அந்த நேரங்களில் புகோவ்ஸ்கி முறையே 26, 32 ரன்களில் இருந்தார். இந்தியா பீல்டிங்கில் சொதப்பியதால் 3 ரன் எடுப்பதில் புகோவ்ஸ்கி அடிக்கடி ஆர்வம் காட்டினார். அப்படி 29வது ஓவரில் புகோவ்ஸ்கி 3வது ரன்னுக்கு ஓட முயன்றபோது ரன் அவுட் ஆகும் வாய்ப்பு பும்ராவால் தவறியது. அதனால் 37ரன்னில் இருந்த புகோவ்ஸ்கி தப்பித்தார். ரன் அவுட்டில் இருந்த தப்பிய புகோவ்ஸ்கி, அடுத்த பந்திலும் அசராமல் 3ரன் எடுத்தார். அவர் நேற்று மட்டும் 8முறை 3ரன் சேர்த்தார். அவரைப்பார்த்து லாபுஷேனும் 2முறை 3ரன் எடுத்தார். ஒரு இன்னிங்சில் இப்படி 10முறை 3 ரன் சேர்க்கப்பட்டது இதுவே முதல்முறையாக இருக்கும்….
The post சிட்னியில் 3வது டெஸ்ட் ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம் appeared first on Dinakaran.
