இலங்கையை போன்று தமிழகத்திலும் தொடர் குண்டுகள் வெடிக்கும்: மிரட்டல் விடுத்த மதுரை ஆசாமி வீடியோவும் வெளியிட்டதால் பரபரப்பு

சென்னை: இலங்கையை போன்று தமிழகத்திலும் அடுத்த 3 மாதத்தில் தொடர் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த மதுரை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மிரட்டல் விடுத்த நபர் வீடியோ  ெவளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 6 மணிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் “நான் சாமி பேசுகிறேன். இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது போல்  தமிழகத்திலும் இன்னும் 3 மாதத்தில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெறும்” என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.உடனே காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் சம்பவம் குறித்து உயர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன்  விசாரணை நடத்தினர். அப்போது, மதுரையில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது. அதன்படி போலீசார், மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.அப்போது, “நான் வழக்கறிஞர் சாமி  பேசுகிறேன். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நான் பிரஸ் மீட் வைத்து பொதுமக்களுக்கு கூற போகிறேன். மதுரை கலெக்டருக்கு இதில் நேரடி தொடர்பு உள்ளது. இதனால் நான் டிஜிபியிடம் தான் பேச முடியும்” என்று கூறி  இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் மதுரையில் உள்ள போலீசாருக்கு சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் சாமி இலங்கை தொடர் வெடி குண்டு விபத்துக்கு பல வகையில் மதுரை கலெக்டருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில்  வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்து வீடியோவும் வெளியிட்ட சாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதேபோன்று, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் தொலைபேசியில் நேற்று முன்தினம் மாலை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு உங்கள் வீட்டில் வெடி  குண்டு வைத்திருப்பதாக, அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்று மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அபிராமபுரம் போலீசார் மற்றும் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சனன்  மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அந்த சோதனையில் எந்த வெடி  குண்டும் கிடைக்க வில்லை. இதனால் இது வெறும் புரளி என தெரியவந்தது. அதை தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல் விடுத்த  செல்போன் என்னை வைத்து போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: