வெடிகுண்டு புரளி கிளப்பிய போதை ஆசாமி சிக்கினார்

சென்னை: மறைமலைநகரில் வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய போதை ஆசாமியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார் (40). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீரக்குமார் மது அருந்தியுள்ளார். அப்போது, போதையில் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, தென்மேல்பாக்கம் அருகே எதிரே வந்த பைக் மீது மோதினார். இதனால், தென்மேல்பாக்கத்தை  சேர்ந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், குடிபோதையில் இருந்த வீரகுமாரின் பைக் பிடுங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய  வாகனத்தை திரும்ப பெற முடிவு செய்த வீரகுமார்,  சென்னை காவல் கட்டுப்பாட்டு  அறைக்கு தொலைபேசி மூலம், தனது டூவீலர் பதிவு எண்ணை கூறி, அதில் வெடிகுண்டு உள்ளது. சிறிது நேரத்தில் வெடித்து சிதறும், உடனடியாக பொதுமக்களை காப்பாற்றுங்கள் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார்.

இதனை தொடர்ந்து தொலைபேசி எண்ணை கண்காணித்த போலீசார், சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வீரகுமாரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, தொலைபேசியில் தவறான தகவல் கொடுத்தையும், தனது பைக்கை மீட்கவே குடிபோதையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதாகவும் கூறினார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: