நிரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டன் கோர்ட் தள்ளுபடி

புதுடெல்லி: இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம், வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) பல ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் நிரவ் மோடி. இங்கிலாந்தில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தும் வழக்கை எதிர்நோக்கியுள்ளார் 48 வயதான நிரவ் மோடி.இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 24ம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெறும். வழக்கின் முழுவிசாரணை மே 30ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 19ம் தேதி லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி, தென்-மேற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் விசாரணை நடந்தபோது, முக்கிய சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும், வழக்கின் முக்கிய தடயங்களை அழித்ததும் மொபைல் போனில் இருந்த புள்ளி விவரங்களை அழித்ததும், மோசடி தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் சர்வரை அழித்ததும் போன்ற குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார்.லண்டனில் குறைந்தபட்சம் 2 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்பவருக்கு குடியிருக்கும் உரிமை அடிப்படையில் ‘சூப்பர் பணக்காரர்’ அந்தஸ்து அளித்து இன்வெஸ்டர் விசா வழங்கப்படும். இந்த நடைமுறை கடந்த 2015ல் அமல்படுத்தப்பட்டது. அப்போது நிரவ் மோடி லண்டனில் குடியிருக்க விசா பெற்றிருந்தார். அந்த விசாவை வைத்து அவர் லண்டனில் தஞ்சமடைந்தார்.பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி அம்பலமாவதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜனவரியில் நிர்வ் மோடி தனது குடும்பத்தினருடன் நாட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார்.

சொகுசு கார்கள் 3.29 கோடிக்கு ஏலம்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருக்கு சொந்தமான 12க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை அவற்றை 3.29 கோடிக்கு ஏலம் விடுத்து அந்த பணத்தை அரசு கரூவூலத்தில் டிபாசிட் செய்துள்ளது.சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் இந்த 13 சொகுசு கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று இந்த கார்களை அமலாக்கத்துறை ஏலம் விட்டுள்ளது. நிரவ் மோடிக்கு சொந்தமான 11 சொகுசு கார்கள், 2 சொகுசு கார்கள் சோக்சி குழுமத்திற்கு சொந்தமானது. இந்த கார்கள் கடந்த 25ம் தேதி ஆன்லைன் மூலம் ஏலம்விடப்பட்டது. இதேபோல், கடந்த மாதம் வருமான வரித்துறை, நிரவ் மோடிக்கு சொந்தமான கலைநுட்பம் மிகுந்த கலை பொக்கிஷங்களை கைப்பற்றி அவற்றை ஏலம் விட்டு 3,28,94,293 வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: