விளையாட்டு வீரர்களான குடும்பம் ஆசிய தடகளத்தில் 2 வெள்ளி வென்ற திருச்சி புதுமாப்பிள்ளை: ஒலிம்பிக்கில் ஜொலிக்க வேண்டும் என தாய் விருப்பம்

லால்குடி: திருச்சியை சேர்ந்த புதுமாப்பிள்ளை ஆரோக்கிய ராஜிவ் தடகள போட்டியில் 2 வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ஒலிம்பிக்கில் ஜொலிக்க வேண்டும் என்று அவரது தாய் விருப்பம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வழுதியூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன்-லில்லி சந்திரா தம்பதியின் மகன்  ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜிவ். தற்போது, கத்தார் நாட்டில்  நடைபெறும் மிக்சிங் ரிலே மற்றும் ஆண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயத்தில்  வெற்றி பெற்று இரண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். அவரது குடும்பத்தினர் லால்குடி சரவணா நகரில் வசித்து வருகின்றனர். இதுகுறித்து,  ஆரோக்கியராஜிவ்வின் தாயார் லில்லி சந்திரா  கூறுகையில்,  ‘‘எங்களது குடும்பம் விவசாய குடும்பம். எனது கணவர் விளையாட்டு வீரர். உயரம் தாண்டுதலில் மாநில அளவில் நடந்த போட்டிகளில்  கலந்து கொண்டுள்ளார்.  விவசாய குடும்பம் என்பதால் எனது கணவரால் விளையாட்டில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் தனது மகன்களை விளையாட்டில் ஊக்கப்படுத்தி வந்தார்.

எனது மூத்த மகன் ஆரோக்கியராஜிவ் வழுதியூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தார்.  லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மற்றும் திருச்சி ஜோசப்  கல்லூரியில்  பட்டப்படிப்பு முடித்தார். 2010ம் ஆண்டு ஆரோக்கியராஜிவ் ராணுவத்தில் சேர்ந்தார்.   ராணுவத்தில் இருந்து கொண்டே கடந்த  ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெள்ளி  பதக்கம் பெற்றார்.  தற்போது,  கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் தடகள போட்டியில்  ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து மிக்சிங் ரிலே மற்றும் ஆண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.  இது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளது. அவர் ஒலிம்பிக் போட்டியில்  தங்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் குடும்பத்தின் நோக்கம் என்றார்.

கடந்த ஆண்டு தான் ஆரோக்கியராஜிவுக்கு திருமணம் நடந்துள்ளது. மனைவி அனுசுயா திருச்சியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். ஆரோக்கியராஜிவின் தம்பி  டேனியேல் ரஞ்சித்தும் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவரும்  தடகள விளையாட்டு வீரர்.  தங்கை எலிசபெத் ராணி வாலிபால்  வீராங்கனை. ஆரோக்கியராஜிவ்வின் குடும்பமே விளையாட்டு  வீரர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: