பல ஆண்டுகளாக சுகாதாரமே இல்லை டெல்லியை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் உயர்தர இலவச கழிப்பறை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவு

மதுரை: டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, அங்குள்ளதுபோல தமிழகத்தில் கட்டணமில்லா உயர்தர கழிப்பறைகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு   ஐகோர்ட் கிளை  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். கரூரை சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் உள்ள கழிப்பறையில் நபர் ஒன்றுக்கு ரூ.5-ல் இருந்து ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதுடன், கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை.   பெரும்பாலான பேருந்து நிலையங்களில் இலவச பொதுக்கழிப்பறை வசதிகள்   பல ஆண்டுகளாக சுகாதாரமாக    இல்லை.

டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில்  உயர்தரத்துடன் இலவச கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், விமான நிலையம்,  கோயில் உள்ளிட்ட பொதுமக்கள்  அதிகம் கூடும் இடங்களில்  சுகாதாரமான, கட்டணமற்ற  இலவச கழிப்பறை வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். அதேநேரத்தில்,  உள்ளாட்சிக்கு சொந்தமான. கழிப்பறைகள்,   குறைந்த ஒப்பந்த தொகைக்கு ஏலம்  விடப்படுகிறது. இங்கு, ஒருமுறை பயன்படுத்துவதற்கு   அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நகராட்சி விதிகளுக்கு எதிராக உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய  வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள்  என்.கிருபாகரன்,  எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள், ``டெல்லியில்  பொதுக்கழிப்பிடங்கள் சுத்தமாக உள்ளன.  அங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. கழிப்பறை சுவர்களில் தனியார் நிறுவன விளம்பரங்களை காட்சிப்படுத்துவதால் கிடைக்கும்  வருவாயை கொண்டு, கட்டணமில்லா கழிப்பறை மேம்பாட்டுக்காக பயன்படுத்துகின்றனர். எனவே, டெல்லியைப்போல்,  தமிழகத்திலும்  நடைமுறைப்படுத்த வேண்டும்.  அதற்காக,  ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் குழு   அமைத்து, டெல்லி சென்று  ஆய்வு செய்து    தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: