நான் சொன்னது ராமதாசுக்கு கேட்கவில்லை என நினைக்கிறேன் பாஜ, அதிமுக செய்த பாவத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்: காங்கிரஸ் தலைவர் அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கூறிய கருத்துக்கள் ராமதாசுக்கு சரியாக சென்றடையவில்லை. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு சாலைகள் போடுவதை தடை செய்யவில்லை. சேலம்  - சென்னை பசுமை வழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள எவ்வித நிபந்தனைகளையும் தமிழக அரசு பின்பற்றவில்லை என்பதே நீதிமன்ற தீர்ப்பு  2017ம் ஆண்டு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட பாரத் மாலா பரியோஜனா திட்டத்தில் சென்னை - மதுரை நெடுஞ்சாலை திட்டம்தான் சேர்க்கப்பட்டதே தவிர, சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் சேர்க்கப்படவில்லை.  

 ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் கொண்டுவரப்பட இருந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை ஒரு தனி மனிதரின் ஆதாயத்திற்காகவே தமிழக அரசு மிகுந்த அக்கறை காட்டியது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எந்த திட்டத்தையும் பாமகவைப் போல, அரசியல் ஆதாயத்திற்காக கண்மூடித்தனமாக எதிர்க்கிற கட்சி அல்ல.  ஆனால் அதற்கு மாறாக திட்டத்தை மக்கள் மீது திணிக்க முற்பட்ட பாவத்தை பாஜவும், அதிமுகவும் இணைந்து செய்ததை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். இத்தகைய பாவத்தைச் செய்த கட்சிகளோடு கூட்டணி வைத்த மகாபாவத்தை பாமக செய்திருக்கிறது. அதிலிருந்து ராமதாஸ் விடுபட முடியாது.

 ராமதாஸ் தன்னுடைய டிவிட்டரில், என்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்திற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைகுனிய வேண்டுமென்று கூறியிருக்கிறார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் வழியில் வந்தவர் மு.க.ஸ்டாலின். அவர் ஒருபோதும் தலைகுனிய வேண்டிய அவசியம் வராது. தமிழக அரசியலில் அவர் எப்போதும் வீறுநடை போடுவதற்கு உதவியாகவே என்னுடைய செயல்பாடு இருக்கும்.

 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: