அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மகப்பேறு பெட்டகம் வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை:  புதுக்கோட்டையை சேர்ந்த செல்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக குடும்ப நலத்துறை சார்பில் 2016, பிப். 22ம் தேதி ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக  ₹5.50 கோடியை ஒதுக்குவதாக அறிவித்திருந்தது. மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. மாதுளை மணப்பாகு, கருவேப்பிலை பொடி, இரும்பு லேகியம், ஏலாதி சூரண மாத்திரை, பாவன பஞ்சங்குல தைலம், உளுந்து தைலம், சதாவேரி லேகியம் உள்ளிட்ட மருந்துகள் இப்பெட்டகத்தில் உள்ளன. தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சத்து 70 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் 3 லட்சம் பிரசவம் நடைபெறுகின்றன. இந்த மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை முறையாக உபயோகிக்கும் பெண்களில் 70 சதவீத பெண்களுக்கு சுகப்பிரசவமும், 80 சதவீத குழந்தைகள் முழுமையான ஆரோக்கியத்துடனும் பிறக்கின்றன.

Advertising
Advertising

புதுக்கோட்டை, வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் பெற விண்ணப்பித்த நிலையில், சித்தா பிரிவு இல்லை என்பதற்காக இப்பெட்டகம் வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 1,800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள நிலையில், 700 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே சித்த மருத்துவ பிரிவுகள் உள்ளன. இதனால் சித்த மருத்துவப்பிரிவு இல்லாத பகுதிகளில் இருக்கும் ஏழை தாய்மார்கள்  பெட்டகத்தை பெற இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.  எனவே, சித்த மருத்துவப்பிரிவு இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெட்டகத்தை வழங்க உரிய உத்தரவிட வேண்டும்.

குழந்தைகளை பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் கிடைக்கும் வகையில் அதற்கான அரசாணையை முழுமையாக, முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத்தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (புதன்) ஒத்தி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: