சர்ச்சை ஆப்ஸ்களை தடை செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்?

* புதுப்படங்கள் இணையத்தில் ரிலீசாகிறதே?

* ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுரை அருகே கீழக்குயில்குடியை சேர்ந்த விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, ப்ளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகள் அதிகரிக்க தொடங்கி விட்டன. இது பள்ளிக்குழந்தைகளை பாதிக்கிறது.தவறான இணையதள முகவரிகளை குறிப்பாக ப்ளூவேல் உள்ளிட்ட ஆபத்தான விளையாட்டுகள்,  ஆபாச இணையத்தளங்களை பார்க்க முடியாமல் அதன் முகவரியை  பெற்றோர்கள் தடை செய்து கட்டுப்படுத்தலாம். எனவே, பேரன்டல் கன்ட்ரோல் சாப்ட்வேர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இணையசேவை வழங்குவோரான ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய இணையசேவைதாரர்களை தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்து  பதிலளிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய இணைய சேவைதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, ‘‘பல கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் கண்காணிப்பது எளிதான காரியம் இல்லை. அதே நேரத்தில் நீதிமன்றம் என்ன உத்தரவு வழங்கினாலும் அதை பின்பற்ற தயாராக உள்ளோம்’’ என்றனர்.

இதனையடுத்து நீதிபதிகள், ‘‘சீனா பல செயலிகளை தயாரித்து   உலகம் முழுவதும் புழக்கத்தில் விடுகிறது. ஆனால், அவர்கள் தயாரித்த சில செயலிகளை அவர்களது நாட்டிலேயே தடை செய்தும், அதனை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். இந்தியாவில் மட்டும் ஏன் சர்ச்சைக்குரிய சில செயலிகளை(ஆப்ஸ்) கண்காணிக்க  மற்றும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது? பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட புதுப்படங்கள்,  அடுத்த நாளே எவ்வாறு இணையத்தில் வெளியாகிறது? இதனை கட்டுப்படுத்த முடியாதா?’’  என கேள்வி எழுப்பி, விசாரணையை இன்றைக்கு (புதன்) ஒத்தி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: