அரசியல் கட்சியினர் வாகனங்களில் கட்சிக்கொடியை கட்ட சட்டப்படி அனுமதியில்லை: போக்குவரத்து துறை சார்பில் பதில் மனு

மதுரை: அரசியல் கட்சியினர் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது உள்ளிட்ட செயல்களுக்கு, மோட்டார் வாகன சட்டப்படி எவ்வித அனுமதியும் இல்லை என போக்குவரத்துத்துறை சார்பில் ஐகோர்ட் கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலை, 6 வழிச்சாலை என விரிவாக்கம் செய்யப்படுகின்றன. நெடுஞ்சாலைகளை அமைப்பது, பயன்பாட்டிற்கு கொண்டு வருவது மட்டுமே அரசின் பணி. சாலைகளை பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் சுங்கச்சாவடிகளை அமைத்து சாலைகளை பராமரிப்பு செய்ய வேண்டும். முக்கியமாக சாலைகள் இணைப்பு பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைப்பது, வளைவுப்பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்துவது, சாலையின் நடுவே அரளிச்செடிகள் நடுவது போன்ற பணிகள் முறையாக நடைபெறுவதில்லை.

இதன் காரணமாக கடந்த  2016ல் 1,50,785 பேரும், 2017ல் 1,47,913 பேரும்  சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இவ்வாறு நடந்த விபத்தில்  இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்துக்கொள்வது, பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது ஆகியவற்றிற்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா என நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இம்மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. போக்குவரத்துத்துறை சார்பில், ‘‘இருசக்கர வாகனங்களில் முகப்பு விளக்கு அல்லாமல் ஒரு எல்இடி பல்பும், நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்கு அல்லாமல் இரண்டு எல்இடி பல்புகளும்  பொருத்தப்படுவது வாகனம் தயாரிக்கும் முறையாக உள்ளது. இவ்வாறு பொருத்தப்படும் எல்இடி பல்புகள் வாகனங்களை இயக்க தொடங்கும்போது, எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிரில் வரும் வாகனங்கள், வாகனம் இருப்பதை அறிவதற்கு உதவியாக அமைவதோடு விபத்தும் தவிர்க்கப்படும். அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்துக்கொள்வது, பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது ஆகியவற்றிற்கு மோட்டார் வாகன சட்டப்படி எவ்வித அனுமதியும் இல்லை’’ என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: