இலங்கையில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு : அனைத்து அரசு அலுவலகங்களிலும் 3 நிமிடம் மவுன அஞ்சலி

கொழும்பு : இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலை தொடர்ந்து இன்று அங்கு தேசிய துக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர் குண்டுவெடிப்பால் இலங்கை மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் சூழலை கட்டுக்குள் கொண்டு வர அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக காலையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மரியன்னை தேவாலயத்தில் இன்று காலை 8.15 மணி அளவில் வழிபாடுகளுடன், மெழுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியதுடன், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதோடு, அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்ராஸ் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் காலை 8.30 மணி முதல் 8.33 மணி வரையிலான 3 நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதேவேளை, தேசிய துக்க தினம் இன்று யாழ். பெரிய கோவிலில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இவ் அஞ்சலி நிகழ்வின் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தீபங்களை ஏற்றி அமைதி பிராத்தனை செய்ததுடன் ஆலயத்திற்குள் விசேட பிராத்தனையும் நடைபெற்றது. இதனிடையே குண்டு வெடிப்பில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் ஆறுதல் அடைய முடியாத அளவிற்கு கண்ணீரில் மூழ்கி உள்ளனர்.

இதனிடையே  குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதிமன்ற உத்தரவின்றி கைது செய்ய முப்படை வீரர்களுக்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் பரவுவதை தடுக்க முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு குறித்து சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் தனது விசாரணையை தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: