அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் இழுபறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு உதயகுமார் இடையே மீண்டும் மோதல்

சென்னை: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இந்நிலையில் அதிமுக சார்பில்  வேட்பாளர்களை அறிவிப்பதற்கான ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி 5 மணி  வரை நடைபெற்றது. இரவு நீண்ட நேரம் ஆகியும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதற்கு, திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா  ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று நீண்ட நேரம் வாக்குவாதம் செய்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

 மதுரை எம்பி தொகுதிக்கும் இதே போன்றுதான் இரண்டு அமைச்சர்களும் பிரச்னை செய்தார்கள்.  அதனால், அமைச்சர் உதயகுமாரை சமாதானப்படுத்த மதுரை மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அவர் மாவட்ட செயலாளராக  அறிவிக்கப்பட்டார். மற்றொரு பக்கம் திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த எம்எல்ஏ போஸ் மனைவி மற்றும் 2 மகன்கள் போட்டியிட சீட் கேட்டு வருகின்றனர். மேலும், சூலூர் தொகுதியில் மரணம் அடைந்த அதிமுக வேட்பாளர் கனகராஜ் மனைவி சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சரும் மேயருமான வேலுச்சாமி போட்டியிடுவார் என்று  கூறப்படுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் என்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் ஒருவருக்கு சீட் வழங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைச்சர் கடம்பூர்  ராஜு பொறுப்பாளராக உள்ளார். அதனால் அவர் காட்டும் நபருக்குத்தான் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதேநேரம், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது அதிமுக இரண்டு அணியாக போட்டியிடும்  நிலை உள்ளது. அதனால், கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என்று அவரது கட்சி தொண்டர்கள் கூறி வருகிறார்கள். அதனால், ஓட்டப்பிடாரம் தொகுதியில்  புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி அல்லது அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை நிறுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அதிமுக கூட்டணியில்  இருந்து கிருஷ்ணசாமி வெளியேறுவாரா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: