துறையூர் அருகே கோயில் விழா நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பலி: பூசாரியிடம் பிடிகாசு வாங்கும் போது பரிதாபம்

துறையூர்: துறையூர் அருகே கோயில் விழாவில் பூசாரியிடம் பிடிகாசு வாங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் வாழவைக்கும் வண்டித்துறை கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. சித்ரா பவுர்ணமியன்று வருகின்ற பக்தர்களுக்கு மட்டும் பூசாரி தனபால் பிடிக்காசு  கொடுப்பது வழக்கம். இந்த பிடிகாசை வீட்டில் வைத்தால், செல்வம் பெருகுமாம். இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி நேற்று கோயில் பூசாரி பக்தர்களுக்கு குறி சொன்னார். அவரிடம் பிடிகாசு வாங்குவதற்காக,  பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பிடிக்காசு பெறுவதற்காக கூட்டம் முண்டியடித்தது. பாதுகாப்பிற்காக சுமார் 150 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.ஒரு கட்டத்தில் கோயிலின் முன் வாயிலில் இருந்த மூங்கில் சாரத்தின் வழியாக சென்ற பக்தர்கள்  திடீரென கூட்டமாக ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு அருகில் உள்ள பாதையில் சென்றதால் கடும் நெரிசல்  ஏற்பட்டது. ஏராளமானோர் நெரிசலில் சிக்கி அலறினர். இதில் பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

நெரிசலில் சிக்கியவர்களில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அப்புசாமி மனைவி சாந்தி(50), கடலூர் மாவட்டம் திட்டக்குடி முருக்கன்குடியை சேர்ந்த ராஜவேல்(55), பெரம்பலூர் வேப்பந்தட்டை பிள்ளாகுளத்தை சேர்ந்த ராமர்(50),  சேலம் மாவட்டம் திருமானூர் மங்களாபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி காந்தாயி(38), கடலூர் மாவட்டம் சின்னகையளந்தூைர சேர்ந்த வெங்கடாஜலம் மனைவி பூங்காவனம்(50), விழுப்புரம் மாவட்டம்  வடபொன்பரப்பி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவி  மனைவி வள்ளி (35), கரூர் மாவட்டம் நன்னியூர் மண்மங்கலத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன்(55) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 11  பேர் படுகாயமடைந்தனர்.  இவர்களுக்கு துறையூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பி ஜியாவுல்ஹக், மாவட்ட கலெக்டர் சிவராசு ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். இது குறித்து துறையூர்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பூசாரி தனபால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். பிரதமர், முதல்வர் நிவாரணம்: 7 பேர் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், மோடி  உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ₹2 லட்சமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா ₹1 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு தலா ₹50 ஆயிரமும் நிவாரணமாக  வழங்க உத்தரவிட்டுள்ளனர். மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ திருச்சியில் திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கிறேன். இதுபோன்ற கோவில் திருவிழாக்களில் தமிழக காவல்துறை தனது பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: