3ம் கட்ட வாக்குப்பதிவுடன் தென் மாநிலங்களில் 23ம் தேதி மக்களவை தேர்தல் முடிகிறது

புதுடெல்லி: நாளை மறுதினம் நடக்க உள்ள 3ம் கட்ட வாக்குப்பதிவுடன் தென் மாநிலங்களில் மக்களவை தேர்தல் நிறைவடைகிறது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. இதில்,  தமிழகம், புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திராவில் ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் 2 கட்டமாகவும் தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும்,  தெலங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த கடந்த 18ம் தேதியுடன் மக்களவை தேர்தல் முடிந்தது. இதோடு, ஆந்திராவில் 175 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடந்து முடிந்தது.

Advertising
Advertising

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 1 தொகுதிக்கும் கடந்த 18ம் தேதி நடந்த 2ம் கட்ட வாக்குப்பதிவில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தில் 18 பேரவை தொகுதிகளுக்கும்  இடைத்தேர்தல் நடந்தது. இதோடு கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும் நடந்தது. இந்நிலையில், 115 மக்களவை தொகுதிகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடக்கிறது. இதில்,  கர்நாடகாவில் எஞ்சிய 14 தொகுதிகளுக்கும், கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இம்முறை போட்டியிடுவதால் அங்கு நடக்கும்  வாக்குப்பதிவு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. 3ம் கட்ட வாக்குப்பதிவுடன் தென் மாநிலங்கள் அனைத்திலும் தேர்தல் நிறைவடைகிறது. இதன் மூலம் தென் இந்தியாவில் தேர்தல் களம் சூடு தணிகிறது.

வேலூர் தொகுதி கதி?

தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடக்க உள்ளது. ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான  வாக்குப்பதிவு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகள் அனைத்து மே 23ம் தேதி வெளியிடப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: