பொன்பரப்பியில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : கே.எஸ்.அழகிரி

சென்னை: பொன்பரப்பியில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் பாதுகாக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு பரவலாக அமைதியாக நடைபெற்றாலும், பல்வேறு இடங்களில் அப்பாவி பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். பாஜ-அதிமுக கூட்டணியின் தோல்வி உறுதி என்ற சூழல் உருவான காரணத்தால் பல இடங்களில் கலவரங்கள் வெடித்துள்ளன. தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் உதவியோடு இத்தகைய கலவரங்கள் மூடிமறைக்க முற்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட மக்கள் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிற சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆரம்பம் முதலே பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வந்தனர்.
Advertising
Advertising

அவர் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில்  மதவாத, ஜாதிய போக்கு கொண்ட சக்திகள் ஒன்று சேர்ந்து அவரை வீழ்த்த வேண்டுமென்று தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சிகள் எடுபடாத காரணத்தால் பொன்பரப்பியில் அவருக்கு ஆதரவாக இருந்த தலித் மக்களின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.20க்கும் மேற்பட்டவர்கள் வன்முறை தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர்.அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறையினர் சிலரை கைது  செய்தாலும் இந்த கொடிய சம்பவத்தின் சூத்திரதாரிகளாக இருந்த அதிமுக- பாமகவினரை கைது செய்யாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தாக்குதலில் ஈடுபட்டு குற்றம் செய்தவர்களை காவல்துறையினர் பாதுகாக்கக் கூடாது. எனவே, பொன்பரப்பியில் அப்பாவி ஏழை, எளிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படி வழக்கு பதிவு செய்ய மறுக்கிற காவல்துறை அதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: