பொன்பரப்பியில் மோதல் விவகாரம் வன்முறை தூண்டியோர் மீது நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பொன்பரப்பியில் வன்முறையை தூண்டியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் அப்பாவிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய்யான வழக்குகளை பதிந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறை தொல்லை தருவது கண்டிக்கத்தக்கது.சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வாக்களிக்கச் சென்ற பெண்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ‘‘சிதம்பரம் தொகுதியில் எங்களின் கட்சி வெற்றி பெற்ற பிறகு, இங்குள்ள பெண்களின் கதி என்ன ஆகப்போகிறது பாருங்கள்’’ என்று மிரட்டியுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் இந்த அட்டகாசத்தை அங்கிருந்த மற்றவர்கள் தட்டிக்கேட்டனர். அதற்காக அவர்களையும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் தாக்கியதைத் தொடர்ந்தே இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக, பாமகவை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் காயமடைந்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக, பாமக, ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அப்பாவிகள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்வதும்,   அவர்களின் குடும்பத்தினரை காவல்துறை அச்சுறுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகையப் போக்கை கைவிட்டு, வன்முறையை தூண்டியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? வைகோ கண்டனம்

சென்னை: தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டி இடுகிறார் என்பதால், அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில், நடு வீதியில் பானைகளை உடைத்து, பாமக மற்றும் இந்து முன்னணியினர் நடத்தியுள்ள வன்முறை, கண்டனத்திற்கு உரியதாகும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் கொளுத்தி உள்ளனர். ஒரு தலித் சகோதரர்,  தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

பாமக இளைஞர் அணித் தலைவர், காஞ்சிபுரம் திருப்போரூரில் பேசுகையில், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற வேண்டும் என்று தன் கட்சிக்காரர்களிடம் சூசகமாகச் சொன்னது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கைதான். அவர் போட்டி இடுகின்ற தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில், நத்தமேடு வாக்குச் சாவடியைக் கைப்பற்றி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, ஜனநாயகத்தை அழித்த கொடுமை, பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலும், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அமைதிக்குப் பங்கம் நேர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியும், அவர்களால் ஆட்டுவிக்கப்படுகின்ற தமிழக ஆளுங் கட்சியும் இணைந்து, சட்ட ஒழுங்கைக் கேள்விக்குறி ஆக்குகின்ற நடவடிக்கைகள் தொடர்வது,  பொது அமைதிக்கு ஆபத்து உருவாகி இருக்கின்றது. சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிப்போர் மீது, காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உரிய பாதுகாப்புத் தர வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: