துபாய், மலேசியா, இலங்கையில் இருந்து கடத்தி வந்த 1.45 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 15 பேர் கைது

சென்னை: துபாய், மலேசியா, இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.45 கோடி மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  கொழும்புவில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.  அப்போது சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அஸ்ரத் (24), இஸ்மாயில் (27) உட்பட நான்கு பேர் ஒரு குழுவாக இலங்கைக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பினர். இவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களது உடமைகளை சோதனையிட்டனர். அவர்களது உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் நான்கு பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று  ஆடைகளை களைந்து சோதனையிட்டனர்.

அப்போது, அவர்களது ஆசனவாயில்  ரப்பர் ஸ்பாஞ்ச் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதில் தங்க துண்டுகள் இருந்தன. நான்கு பேரிடமும் தலா 300 கிராம் வீதம் 1.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு 40 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். இதேபோல், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விமானங்களில் நேற்று சென்னைக்கு கடத்தி வரபபட்ட 1.5 கோடி மதிப்புடைய 3.15 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, நாகப்பட்டினத்தை சேர்ந்த அஜ்மீர்காஜா (24) முகமது உசேன் (36), முகமது ஜாகீர் (24) சிவகங்கையை சேர்ந்த விக்னேஷ் (27) டெல்லியை சேர்ந்த ஷாஜகான் (55) ஈரோட்டை சேர்ந்த ஷேக் சையத் (36) சென்னையை சேர்ந்த சையத் இப்ராஹிம் (44) உட்பட 11 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.  இவர்கள் அனைவரும் ஆசன வாயில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரேநாளில் சென்னை விமான நிலையத்தில் 15 பயணிகளிடம் இருந்து 1.45 கோடி மதிப்புடைய 4.35 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: