கோவையில் நேற்று சிறைபிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் டீத்தூள் மட்டுமே இருந்தது : ஆய்வில் உறுதி

கோவை : கோவை உக்கடம் அருகே சிறைபிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரிய திறந்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் லாரியில் டீத்தூள் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடம் அருகே நேற்று இரவு 10.45 மணியளவில் ஒரு கண்டெய்னர் லாரி மிக வேகமாக சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து காவல்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், பறக்கும்படை அதிகாரிகளும் கண்டெய்னரில் இருந்த பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தனர். அதில் டீத்தூள் இருந்ததால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் கண்டெய்னரில் இருந்த அனைத்து பாக்கெட்டுகளையும் பிரித்து பார்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து கண்டெய்னர் லாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து கண்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், லாரியில் இருந்த டீத்தூள் கோவை வழியாக கொச்சினுக்கு துறைமுகத்தில் இருந்து ஜெர்மன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய கொண்டு செல்வதாக தகவல் அளித்தார். இதுகுறித்து டீத்தூள் நிறுவன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு காவல்துறையினர் பேசிய நிலையில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டீத்தூள்கள் பாக்கெட்டுகள் ஏற்றுமதி செய்ய கொண்டு செல்வதாகவும், ஒரு முறை ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டால் அடுத்த ஆர்டர்கள் வராது என்பதால் ஆய்வுகளை விரைந்து செய்து டீத்தூளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கண்டெய்னர் லாரியை ஆட்சியர், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த தனிப்படை கோவை வந்தடைந்தனர். தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வந்த நிலையில் லாரியில் வெறும் டீத்தூள் மட்டுமே இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த 400 பண்டல் டீத்தூளை ஆய்வு செய்தபின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் மக்கள் நீதி மய்யம் பிரமுகர் சாஜித் உள்ளிட்டோர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கோவை மாவட்டத்தில் 153 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: