புதுவண்ணையில் தபால் ஓட்டு மாயம் : தேர்தல் அலுவலரிடம் திமுக புகார்

பெரம்பூர்: புதுவண்ணாரப்பேட்டையில் தபால் ஓட்டு மாயமானது பற்றி தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் மனு கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 137 பேர் வாக்களிக்க ஏற்றவர்கள் என பதிவு ரிஜிஸ்டரில் இருந்தது. இதன்படி வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் 19 ஓட்டுகளும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 19 ஓட்டுகளும், மத்திய சென்னையில் 75 ஓட்டுக்களும், தென்சென்னையில் 23 ஓட்டுகளும் என 136 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது. இதில் ஒரு ஓட்டு மாயமானது.

இதுபற்றி அறிந்ததும் வடசென்னை திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதுகணேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், ஒரு தபால் ஓட்டு மாயமானதற்கு என்ன காரணம். அரசு ஊழியர்கள் முறையாக எழுதி கொடுத்தும் தபால் ஓட்டுபோட அனுமதிக்காது ஏன்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினியிடம் புகார் கொடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பொறுத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று திமுகவினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: