மோடி ஜி இந்த அக்கா யாரையும் பார்த்து பயந்தது கிடையாது: மம்தா பானர்ஜி அதிரடி பதில்

ஜல்பைகுரி: எதிர்கட்சிகளை அச்சுறுத்த அரசு இயந்திரங்களையும், அரசு அமைப்புகளையும் பிரதமர் மோடி பயன்படுத்துவதாக ேமற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி் பேசியதாவது:

மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? ஆந்திர தலைமை செயலாளர் ஏன் மாற்றப்பட்டார்? பா.ஜ உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மோடி தனது அமைச்சரவை செயலாளரை நீக்க வேண்டியதுதானே? நான் பல பிரதமர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் மோடி போல் பழிவாங்கும் நபரை நான் பார்த்தது இல்லை. மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், கர்நாடக முதல்வர், ஆந்திர முதல்வர் குடும்பங்களில் நீங்கள் ரெய்டு நடத்துகிறீர்கள். இந்த சோதனைக்கு வருமான வரித் துறையினரையும், சிபிஐ அமைப்பையும் பா.ஜ அரசு பயன்படுத்துகிறது.

மோடியை பார்த்து நான் பயப்படுவதாக அவர் கூறுகிறார். ஆனால், என்னை கண்டுதான் மோடி பயப்படுகிறார். நீங்கள் என்னை அதிகம் அச்சுறுத்தினால், நான் மேலும் கர்ஜிப்பேன். இந்த அக்கா யாருக்கும், எதற்கும் பயப்படும் நபர் அல்ல. 34 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கூட்டணியை தனியாக வீழ்த்தியவள் நான். மேற்கு வங்கத்தில் அரசு அதிகாரிகள் மாற்றப்படுவதால் நான் பயப்படவில்லை. தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயம் உள்ளவர்கள்தான், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பிரதமர் மோடி போலி காவலாளி. அவர் பொய்யர், திருடர். புல்வாமா தாக்குதலில் வீரர்களின் தியாகத்தை பா.ஜ அரசியலாக்க முயற்சிக்கிறது. மேற்கு வங்கத்துக்கு பிரதமர் எதையும் செய்யவில்லை. மாநிலத்தின் பெயரை மாற்ற கூட மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

நாங்கள் கிலோ ரூ.2க்கு மக்களுக்கு அரிசி வழங்குகிறோம். ஆனால், பிரதமர் மோடி அரசின் செயலால் நாட்டில் 2 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. மக்கள் பணத்தை கொள்ளையடித்து சிலர் வெளிநாடு தப்பிச் செல்ல பிரதமர் மோடி உதவினார். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

ஆணையத்துக்கு உரிமை உள்ளது. மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்துக்கு துணை தேர்தல் ஆணையர் ஒருவர் அனுப்பிய பதில் கடிதத்தில், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 28/ஏ பிரிவின் படி, தேர்தல் நடத்தை விதிமுறை காலத்தில் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு முழு உரிமை உள்ளது. இந்த நடவடிக்கையை மத்திய அரசின் உத்தரவுப்படி உள்நோக்கத்துடன் செய்வதாக நீங்கள் கூறியது துரதிருஷ்டம். மேற்குவங்க தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்கும் துணை தேர்தல் ஆணையர்கள், சிறப்பு போலீஸ் பார்வையாளர் ஆகியோரின் அறிக்கை அடிப்படையிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர்களும் மேற்கு வங்க நிலவரத்தை நன்கு அறிந்த  மூத்த அதிகாரிகளே’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: