‘மீண்டும் மோடியே வரவேண்டும்’ பேச்சு; ராஜஸ்தான் கவர்னர் பதவி பறிப்பு? ஜனாதிபதி நாடு திரும்பியதும் நடவடிக்கை

புதுடெல்லி: ‘மீண்டும் மோடியே வரவேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடு சென்ற ஜனாதிபதி நாடு திரும்பியதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண்சிங், சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது,   ‘பிரதமராக மீண்டும் மோடியே வர வேண்டும். அவரே தேர்வு செய்யப்பட வேண்டும்’ என்று கருத்தை பாஜ தொண்டர்கள் மத்தியில் வெளியிட்டிருந்தார்.

ஆளுநர் பதவியில் இருக்கும் அவர், பாஜவுக்கு ஆதரவாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.  அதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளை ஆளுநர் கல்யாண் சிங் மீறியிருப்பதை உறுதி செய்தது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியது.

அந்தக் கடிதத்தை பரிசீலித்த ராம்நாத் கோவிந்த், தேர்தல் ஆணையத்தின் புகாரை ஏற்றுக் கொண்டதுடன் ஆளுநர் கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதத்தை அனுப்பி உள்ளார். இதனை, ஜனாதிபதி மாளிகையின் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம், ஜனாதிபதி செயலகம், தற்போது உள்துறை அமைச்சகம் என்று, அடுத்தடுத்து கடிதங்கள் அனுப்பட்டு வருவதால், கல்யாண் சிங் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தென்ஆப்ரிக்கா நாடுகளுக்கு சென்றிருப்பதால், அவர் நாடு திரும்பியவுடன் ஆளுநர் கல்யாண் சிங் மீது நடவடிக்கை இருக்கும் என்று, உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 1990ம் ஆண்டில் இமாசலப் பிரதேச பிரதேச ஆளுநராக இருந்த குல்ஸார் அகமது, தேர்தலில் போட்டியிட்ட தமது மகனை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்ததால், தனது பதவியை குல்ஸார் அகமது ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நிலை, தற்போது ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்குக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: