ஸ்மிருதி பொட்டுக்கு புது அர்த்தம் பிஆர்பி கட்சி தலைவர் கைது: மகாராஷ்டிரா 48 தொகுதிகள்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மக்கள் குடியரசு கட்சி(பி.ஆர்.பி.) கட்சித் தலைவர் ஜெய்தீப் கவாடே கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மக்கள் குடியரசு கட்சி இடம்பெற்றுள்ளது. நாக்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் நானா பட்டோலேக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குடியரசு கட்சித் தலைவர் ஜெய்தீப் கவாடே, நாக்பூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை மட்டுமல்லாது, மற்றொரு மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானியையும் கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது:  நிதின் கட்கரிக்கு அருகில் அமர்ந்து கொண்டு அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று ஸ்மிருதி இரானி கூறுகிறார். ஸ்மிருதி இரானி பற்றி நான் ஒரு தகவல் கூறுகிறேன். அவர் தனது நெற்றியில் பெரிய பொட்டாக வைத்துக் கொள்கிறார். எந்த பெண் அடிக்கடி தனது கணவனை மாற்றிக் கொள்கிறாரோ அவரது நெற்றிப் பொட்டின் அளவும் கணவனின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே போகும் என்று சிலர் கூறி நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அவரது இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. ஜெய்தீப் கவாடேயின் இந்த பேச்சுக்கு பாஜ.வினர் மட்டுமல்லாது பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சிவசேனா மூத்த தலைவரும் சட்டமேலவை உறுப்பினருமான நீலம் கோரே கூறுகையில், ‘‘பெண் அரசியல் தலைவர்களுக்கு எதிராக இப்படி கீழ்த்தரமாக பேசுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்கிடையே, ஜெய்தீப் கவாடேயின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் பாஜ.வினர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து நாக்பூர் தொகுதி தேர்தல் அதிகாரி மதன் சுபேதார், ஜெய்தீப் காவடேக்கு எதிராக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ஜெய்தீப் காவடேக்கு எதிராக போலீசார் இ.பி.கோ.295(ஏ), 500, 294, 171(ஜி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஜெய்தீப் கவாடே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: