எதிரிகளை எளிதாக வெற்றி கொள்ளலாம் என்ற அரசியல் நோக்கத்திற்காகத்தான் வருமானவரி சோதனை : துரைமுருகன் பேட்டி

வேலூர்:எதிரிகளை எளிதாக வெற்றி கொள்ளலாம் என்ற அரசியல் நோக்கத்திற்காகத்தான் இந்த வருமானவரி சோதனை நடத்தப்பட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு, துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 3 நாட்களாக வாக்கு சேகரிப்பதை தடுத்து இருக்கிறார்கள். எதிரிகளை எளிதாக வெற்றி கொள்ளலாம் என்ற ஒரே ஒரு அரசியல் நோக்கத்திற்காகத்தான் இந்த சோதனை. இது முழுமையாக அரசியல்தான். என் தலைவர்  இருந்த அதே இடத்தில், எங்கள் தளபதி இருந்து எனக்கு ஆறுதல் சொல்கிறார். வந்தார்கள், கேட்டார்கள், எதிலும் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று சொன்னோம், சரி என்று போய்விட்டார்கள். இனி எங்கள் தோழர்களுடன் தேர்தல் பணியை தொடருவோம். தேர்தலை நிறுத்துவதாக அதிகாரி சொல்லியிருப்பது, அவருடைய இஷ்டம். அதைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்லக்கூடாது.

அதுதானே அவர்களது எண்ணம். எப்படியும் கதிர் ஆனந்த் வெற்றி பெறக் கூடாது. இந்த தேர்தலை எப்படி நிறுத்தலாம் என்பதுதான் ஒரே கணக்கு. இது வெற்றி பெற முடியாதவர்கள் போடுகின்ற தப்புக்கணக்கு, முட்டாள் தனமான  நடவடிக்கை.துரைமுருகனை அடித்தால், கழகத்தின் பொருளாளர், முத்த உறுப்பினர் அவரையே சீண்டி விட்டார்களா என்று மற்றவர் பயந்துவிடுவார்கள் என்று ஒரு தப்புக்கணக்கு. இதை செய்வது மத்திய அரசு, மாநில அரசு மற்றும்  அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகள்.

எங்களிடம் அதிகாரிகள் விதிமீறல்களில் எதுவும் ஈடுபடவில்லை. திமுக வெற்றி பெற வேண்டியதை தடுப்பதற்காக, இன்று துரைமுருகன் வீடு, அனிதா ராதாகிருஷ்ணன், நாளை இன்னொருவர் வீடு என்று ஒரு 10, 15 இடங்களில்  இந்த தொல்லையை கொடுப்பார்கள். ஆனால், இது மக்கள் மத்தியில் எந்தவித விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசியல் அரிச்சுவடி கூட இல்லாதவர்கள் செய்யக்கூடிய வேலை.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: