ஓமலூர் வட்டாரத்தில் பொட்டல் காடாக மாறி வரும் மேய்ச்சல் நிலங்கள்

ஓமலூர் : ஓமலூர் வட்டாரத்தில் கடும் வறட்சியால் மேய்ச்சல் நிலங்கள் பொட்டல் காடாக மாறியுள்ளதால், கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், கால்நடை வளர்ப்பு தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு பலர் வாழ்வை நடத்தி வருகின்றனர். சுற்றியுள்ள ஏரி, குளங்களை ஒட்டியுள்ள பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. மேலும், மானாவாரி நிலப்பகுதிகளிலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக விடுகின்றனர்.

கடந்த ஓராண்டாக போதிய மழை இல்லாததால், கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இங்குள்ள சேர்வராயன் மலைத்தொடரில் பெய்யும் மழை, சரபங்கா நதிக்கு நீராதாரமாக உள்ளது. இதன்மூலம் 125 ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து வரும். இதனைக்கொண்டு சுற்றுப்பகுதியில் ஆண்டு முழுவதும் பரவலாக சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், ஆறு மட்டுமின்றி நீர்வழி பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளதால், குறைவாக பெய்யும் மழை நீரையும், சேமிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

நீர்வரத்து சுத்தமாக இல்லாததால், தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு ஏரிகள் மற்றும் அதனையொட்டியுள்ள மேய்ச்சல் நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால், கால்நடைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீரும், மேய்ச்சலுக்கு தீவனமும் கிடைக்காமல் தவித்து வருகின்றன. இந்நிலையில், கோடை காலத்திற்கு முன்பே குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால், ஓமலூர் பகுதி மக்கள் தண்ணீர் கேட்டு அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பசுமை தொலைந்து வருவதால், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகள் வளர்ப்போர் முன்னெச்சரிக்கையாக வைக்கோல் வாங்கி, தீவனம் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: