நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர சிபிஐ, அமலாக்கத் துறை குழு லண்டன் புறப்பட்டு சென்றது: இங்கிலாந்து அதிகாரிகளுக்கு உதவி

புதுடெல்லி: நீரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் வழக்கில் இங்கிலாந்து அதிகாரிகளுக்கு உதவ இந்திய அதிகாரிகள் குழு நேற்று லண்டன் புறப்பட்டது. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடிக்குமேல் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீரவ் மோடி, அவரது குடும்பத்தினரை தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட் என்ட் பகுதியில் நீரவ் மோடி தங்கியிருப்பதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதையடுத்து அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அவருக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ், லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் கடந்த வாரம் அவரை கைது செய்த இங்கிலாந்து போலீசார், வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மேரி மலோன், நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன், நாளை (மார்ச் 29) வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார். இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித்தும் அவரை இந்தியா கொண்டு செல்வதற்கான ஆவணத்தில் இம்மாத தொடக்கத்தில் கையெழுத்திட்டார்.  நீரவ் மோடி ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், இங்கிலாந்து அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்காக சிபிஐ, அமலாக்கப்பிரிவை சேர்ந்த கூட்டுக்குழு நேற்று லண்டன் புறப்பட்டு சென்றது. நீரவ் மோடி தொடர்பான ஆவணங்கள், அண்மையில் அவருடைய மனைவி அமிக்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையுடன் இந்த கூட்டுக்குழு சென்றுள்ளது. இந்த குழு லண்டன் போலீஸ் உள்ளிட்ட துறை அதிகாரிகளை சந்திக்க இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: