சுதர்சன நாச்சியப்பனுக்கு கண்டனம் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க நிர்ப்பந்தமா?: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: கார்த்தி சிதம்பரத்துக்கு நிர்ப்பந்தத்தின் காரணமாக சீட் வழங்கப்பட்டதா என்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் பிரசாரத்தின் போது மாநிலத்தின் உரிமை மீட்டெடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். மாநில அரசின் உரிமையை அடகு வைத்த கட்சி அதிமுக. அப்படியிருக்கும் போது முதல்வரின் பேச்சு கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது. கஜா புயல் உள்ளிட்ட இயற்ைக சீற்ற பாதிப்புக்காக தமிழக அரசு மத்திய அரசிடம் ஒன்றரை லட்சம் கோடி நிவாரணம் கேட்டது. ஆனால், மத்திய அரசு ரூ.3000 கோடிதான் நிவாரணமாக தந்துள்ளது. 5 பாராளுமன்ற உறுப்பினர் இருந்தாலே நாடாளுமன்றத்தையே கதிகலங்க செய்ய முடியும். 50 உறுப்பினர்கள் இருந்தும் நிவாரண உதவியை கூட பெற முடியவில்லை. ரொம்ப பொய் சொல்பவர்களுக்குதான் தொண்டை கட்டிக் கொள்ளும் என்பார்கள். எடப்பாடி பொய் சொல்லி வருவதால்தான் அவருக்கு தொண்டை கட்டிக் கொண்டுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது மத்திய அரசிடம் உரிமையை துணிவுடன் கேட்டு பெற்றார். ஆனால், இப்போது இருக்கும் அதிமுக வேறு.

மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர். மக்களிடம் மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. காங்கிரசில் தகுதி வாய்ந்த தலைவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், காங்கிரசுக்கு 9 மக்களவை தொகுதிகள்தான் இருக்கிறது. தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் வருத்தப்படுவது இயல்பு தான். சீட் கிடைக்கவில்லை என்று வருத்தப்படும் சுதர்சன நாச்சியப்பன் மத்திய அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். கட்சி தலைமை முடிவை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். தலைமையின் முடிவுக்கு மாறாக பேசுவது தலைவருக்கு அழகல்ல. சுதர்சன நாச்சியப்பன் கட்சி மேலிடத்திடம் நெருங்கி தொடர்பு உடையவர். தனது கருத்தை அவர் கட்சி தலைமையிடம் சொல்லியிருக்க வேண்டும். சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம், சுதர்சனம் நாச்சியப்பன் 2 பேர்தான் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக ராகுல்காந்தி தான் முடிவு செய்து அறிவித்துள்ளார். வருத்தத்தை தெரிவிக்கும் போது நாகரீகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.  

சுதர்சன நாச்சியப்பன் கூறியதால் கார்த்தி சிதம்பரம் தோற்க மாட்டார். அவர் சொல்வது ஒன்றும் வேத வாக்கும் அல்ல. கட்சியின் நிர்ப்பந்தத்தால் கார்த்தி சிதம்பரத்துக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அகில இந்திய தலைமையை நிர்ப்பந்திக்கும் தலைவர்கள் யாரும் இல்லை. தேர்தலுக்கு கடைசி இரண்டு நாளில் காவல்துறை செயல்படாது. முழுமையாக தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விடும். பணம் தாராளமாக விளையாடும். இந்த முறை தேர்தல் ஆணையம் தோல்வியடைந்து விடக்கூடாது. தேர்தல் ஜனநாயக தேர்தலாக இருக்க வேண்டும். பணநாயக தேர்தலாக இருக்கக் கூடாது. இவ்வாறு கூறினார். பேட்டியின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு மற்றும் கோபண்ணா, செல்வபெருந்தகை, எம்.பி.ரஞ்சன்குமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: