நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு அமமுக வேட்பாளர்கள் இன்று ஒரேநேரத்தில் வேட்புமனு தாக்கல்

* குக்கர் கிடைக்காவிட்டால் தனிச்சின்னத்தில் போட்டி

நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. திமுக, அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் பெரும்பாலும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். மீதம் உள்ள வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய அமமுக வேட்பாளர்கள் பட்டியலை 2 கட்டங்களாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டிருந்தார். இதேபோல், ஒசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர்களை நேற்று அறிவித்தார். ஏற்கனவே, தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தங்களுடைய பிரசாரங்களை தொடங்கியுள்ளனர். இருந்தாலும், அமமுக வேட்பாளர்கள் யாரும் இதுவரையில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், இன்று மதியம் 1 மணியளவில் அனைத்து தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கின்றனர். முன்னதாக, அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பதிவு செய்யப்படாத கட்சி. எனவே குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு மூன்று சின்னங்களையும் தேர்தல் ஆணையத்திடம் கோர டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு இன்று மதியம் முக்கிய நிர்வாகிகளுடன் டிடிவி.தினகரன் சென்னையில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: