சிக்கிய 3,500 அதிமுக கரை வேட்டிகளை அமைச்சர் தலையீட்டால் விடுவித்த அதிகாரிகள்: ஆண்டிபட்டியில் பரபரப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில், இன்று காலையில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்து வரப்பட்ட அதிமுக கரை வேட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆனால் அமைச்சர் ஒருவரின் தலையீட்டால், பறிமுதல் செய்த வேட்டிகளை சத்தமில்லாமல் விடுவித்து விட்டனர். தேர்தல் பறக்கும் படையினரின் இந்த செயல், ெபாதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள செக் போஸ்டில் இன்று காலை 8.30 மணியளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கலைச்செல்வன் மற்றும் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மதுரையிலிருந்து, தேனி வந்து கொண்டிருந்த சரக்கு வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேனில் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி 3 ஆயிரத்து 500 அதிமுக கரை வேட்டிகள் பண்டல்களாக கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது அதிகாரிகளின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து, வேட்டிகளையும் அவற்றை கொண்டு வந்த சரக்கு வேனையும் அதிகாரிகள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தென் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரின் ஒருவர் உத்தரவின் பேரில் 3,500 வேட்டிகளையும், வேனையும் அதிகாரிகள் விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றதாக சிறு வியாபாரிகளிடம் பணத்தை பறிமுதல் ெசய்யும் பறக்கும் படையினர், பறிமுதல் செய்த ஆளுங்கட்சியின் கரை வேட்டிகளை விடுவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆண்டிபட்டி பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு தேர்தல் பறக்கும் படையினர் துணை போகின்றனர். இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்து வரப்பட்ட அந்த வேட்டிகளை  மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி உடனடியாக மீண்டும் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த முறைகேட்டுக்கு துணை போன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: