ஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு

புதுடெல்லி: ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ஏற்றுமதியாளர்களுக்கான சலுகை திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இணக்க வரி விலக்கு சலுகைகளை ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மூலதன பொருட்களை உள்நாட்டிலேயே வாங்கும் ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இறக்குமதி, ஏற்றுமதி மேம்பாட்டு பட்டியலில் உள்ள மூலதன பொருட்கள் ஆகியவற்றுக்கும் இந்த சலுகை உள்ளது. அதாவது, இபிசிஜி திட்டத்தில் ஏற்றுமதியாளர்கள், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான சில மூலதன பொருட்களை வரி எதுவும் செலுத்தாமல் இறக்குமதி செய்ய முடியும்.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், 2015-20 வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், நிதியாண்டுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இணக்க வரி விலக்கு சலுகை திட்டம் 2020ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை ஏற்றுமதி 8.85 சதவீதம் அதிகரித்து 29,847 கோடி டாலராகவும், இறக்குமதி 9.75 சதவீதம் அதிகரித்து 46,400 கோடி டாலராகவும் உள்ளது. மேற்கண்ட 11 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 16,552 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இது 14,855 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: