தமிழக நலனை பாஜவிடம் அடகு வைத்துள்ள அதிமுக கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் : கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: தமிழக நலனை பாஜவிடம் அடகு வைத்துள்ள அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும், என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பா.ஜ, அதிமுக ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை திமுக தலைமையில் இணைந்து நடத்திய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மதச்சார்பற்ற கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணி ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி. சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணியின் பிரதமர் மோடி என்பதை அறிவித்து விட்டு, திமுக தலைமையிலான கூட்டணிக்கு யார் பிரதமர் என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜகவோடு கூட்டணியில் அதிமுகவை சேர்ப்பதற்கு எத்தகைய உத்திகள் கையாளப்பட்டன என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  

பல அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல்களுக்கான ஆதாரங்கள் மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. மோடி கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே பாஜகவோடு அதிமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது. தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே பாஜகவிடம் சரணாகதி அடைந்திருக்கிறார்கள். இவ்வாறு, கூட்டணி அமைத்த எடப்பாடி, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தி பெயரை முதன் முதலில் முன்மொழிந்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழக நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை எதிர்கால பிரதமராக ராகுல்காந்தி வர வேண்டும் என்பதே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கமாகும். தமிழக மக்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தியை பிரதமராக தேர்வு செய்வதற்கு நிச்சயம் வாக்களிக்கப் போகிறார்கள். இந்நிலையில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பதற்கு எடப்பாடிக்கு என்ன உரிமை இருக்கிறது? எனவே, தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனையும், உரிமைகளையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்ட அதிமுக-பா.ஜ கூட்டணிக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் உரிய பாடத்தை புகட்ட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: