நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை தவிர்த்து தனித்து களம் காணும் எதிர்க்கட்சிகள்: மம்தா, கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு தனித்தனியாக போட்டி

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் சேராமல் மம்தா, கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். பரூக்  அப்துல்லா, லாலு கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை  நடத்தி வருகிறது. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை  முடிந்ததால், அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜவை எதிர்கொள்ள ஒட்டுமொத்த எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட காங்கிரஸ் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வந்தன. ‘மெகா கூட்டணி’ என்ற பெயரிலான கூட்டணியை ஒருங்கிணைத்த மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா  பானர்ஜி கூட்டிய பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாதி,  மதச்சார்பற்ற ஜனதா தளம், திமுக,  ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில், காங்கிரஸ் கட்சியுடன் சில கட்சிகள் மட்டுமே கூட்டணி அமைத்து தேர்தலை  சந்திக்கிறது. தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில், பாஜவை வீழ்த்த காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணியை  உருவாக்க  தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்கும் முடிவினை ஆம் ஆத்மி  கைவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் கூறுகையில்,  ‘பேச்சுவார்த்தைகளிலேயே காங்கிரஸ் கட்சி  அதிகப்படியான நேரத்தை வீணடித்து விட்டது. டெல்லியில் கூட்டணி  தேவையா இல்லையா என்பது  குறித்து  காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த கருத்து  இல்லை, காங்கிரஸ் தலைவர்களின் பிடிவாதமே கூட்டணி ஏற்படாததற்குக் காரணம்’ என்றார். இதனால், அரியானா,  டெல்லி, இமாச்சல் பிரதேசத்தில் ஆம்ஆத்மியுடன்  காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லாத நிலை உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால், அம்மாநில தேர்தல் முடிவுகள் பிரதமரை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.  கடந்த காலங்களில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வந்த  அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன்  சமாஜ் கட்சிகள் ஒன்றாக கைகோர்த்து தேர்தலை சந்திக்கின்றன. இருகட்சிகளும் காங்கிரசை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டன.  ஆனால், காங்கிரஸ் கட்சி  உத்தரபிரதேசத்தில் அதிக சீட்டுகளை கைப்பற்ற, பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. அவர் அங்கு படகு மூலம் கங்கையில் கடந்த 3 நாட்களாக  தீவிர பிரசாரம் மேற்கொண்டு  வருகிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மம்தா பானர்ஜி  காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல்  தனித்து போட்டியிடுகின்றார்.

 இதற்கிடையே மொத்தம் உள்ள 42  மக்களவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல் கட்டமாக மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்  தலைவர் பிமன் போஸ் கூறுகையில், ``முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.  இன்னும் 4 தொகுதிகள் மீதமுள்ளன. காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே  உள்ளோம்” எனக் கூறியுள்ளார். பீகாரில், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான முதல்வர் நிதிஷ்குமார் - பாஜ கூட்டணி உறுதியான நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் லாலு கட்சியான  ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி  வைத்துள்ளது. இருந்தும், தொகுதி பங்கீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வௌியாகவில்லை. அதேபோல், ஜம்மு -  காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை  நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு,  கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதால், மேற்கண்ட மாநிலங்களில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

 

தெலங்கானா, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கும் என்று  எதிர்பார்த்த நிலையில், தற்போது இரு கட்சிகளுமே வேட்பாளர்களை  தனித்தனியாக அறிவித்துள்ளன. குஜராத், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட்  போன்ற பாஜ ஆளும் மாநிலங்களில், அக்கட்சியுடன் காங்கிரஸ் நேரடியாக மோதுவதால், அந்த மாநிலங்களில் கூட்டணி பலமாக ஏதும்  அமைக்கப்படவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: