ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை எதிர்த்து கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றதால் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  கடந்த 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர்  டாக்டர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.சுந்தரராஜின்  வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அரசு மணல் குவாரி ஒப்பந்தம் பெற்றுள்ளதை மறைத்து சுந்தரராஜ் வேட்புமனுதாக்கல் செய்துள்ளார்.

இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலை நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, இந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால், கிருஷ்ணசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கை சுட்டிக்காட்டி, ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில், தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் எனவும், தொகுதிக்கு தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றுள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேர்தல் வழக்கு தற்போது முடிக்கப்பட்டதால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி முடிவெடுக்கலாம். இந்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற பதிவாளர் விரைவாக அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: