அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்: அரசியல் பயணம் முடிவுக்கு வந்தது

தமிழக அரசியல் பிரமுகர்களில் முக்கிய பதவிகளில் இருந்த செஞ்சி ராமச்சந்திரன் கட்சித் தாவி அதிமுகவில் இருக்கும் இடமே தெரியாமல் ஓரங்கட்டப்பட்டுவிட்டார். இதனால் அவருடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவும் கட்சியினர் பேசி வருகின்றனர். திமுகவில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த ராமச்சந்திரன். திமுகவில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட செயலாளர் பதவி வகித்தவர். மதிமுகவில் நின்று வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சர் பதவி சுகத்தையும் அனுபவித்தார். இவர் ஒவ்வொரு கட்சிக்கும் செல்லுமிடம் எல்லாம் நீண்டகாலம் நீடிப்பதில்லை. முதலில் திமுகவில் இருந்து மதிமுகவுக்கு சென்றார். பின்னர் ஊழல் குற்றச்சாட்டு குறித்து வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் மீண்டும் தாய் கட்சியான திமுகவிலேயே கருணாநிதி முன்னிலையில் இணைந்தார்.

பின்னர் கட்சித் தாவி அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். தற்போது அதிமுகவில் இணைந்து தான், இருக்கிற இடமே தெரியாமல் ஓரங்கட்டபட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் போன்ற பல்வேறு முக்கிய பதவிகள் வகித்த செஞ்சியார் அதிமுகவில் முகவரியே தெரியாமல் போய்விட்டார்.

ஜெயலலிதா இருக்கும்போதே அவரை நிர்வாகிகள், அமைச்சர்கள் கட்சி நிகழ்ச்சியில் கூட கடைசி இடத்தில்தான் உட்காரவைத்தார்கள் என்ற புலம்பல் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் மீண்டும், ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்தித்து சீனியர் என்று அவரை சொல்லிக்கொண்டு வலம்வந்தார். இதன் பலனாக மாநில அமைப்புச்செயலாளர் என்ற பதவி கிடைத்தது. மீண்டும் அதிமுகவில் செல்வாக்குமிக்கவராக தன்னைக்காட்டிக்கொண்டு வலம்வந்தார். ஆனால் இந்த தேர்தலில் அவரை கண்டுகொள்ளவில்லை. செஞ்சியை உள்ளடக்கிய ஆரணி பொதுத்தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். அதே தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் சிட்டிங் எம்பி ஏழுமலை, முன்னாள் அமைச்சர் முக்கூர்சுப்ரமணியனும் போட்டிபோட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஏழுமலைக்கு ராஜ்யசபாவில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில் செஞ்சியார், முன்னாள் அமைச்சர், சிட்டிங் எம்பிக்கு மட்டுமே போட்டியிருந்தது. கடைசியில் அதிமுகவில் சாதாரண லிஸ்டில் கூட செஞ்சியார் பெயர் இல்லையாம். மீண்டும் சிட்டிங் எம்பிக்குதான் சீட்டாம். இதனால் செஞ்சியார் முற்றிலும் ஓரங்கட்டபட்டதால் அரசியல் பயணம் முடிவுக்குவந்துவிட்டதாக அதிமுகவினர் பேசி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: