ஜார்க்கண்டில் காங்கிரசுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி சேர முடிவானது. இந்த 4 கட்சிகளும் ஒன்றிணைந்தால் பாஜவுக்கு கடும் நெருக்கடியை தர முடியும் என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்நிலையில் தொகுதி பங்கீட்டில் இந்த கட்சிகளுக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. ஜார்க்கண்டில் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் 7ல் காங்கிரஸ், 4ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 2ல் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, 1ல் ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. காங்கிரஸின் இந்த தொகுதி கணக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எதிர்ப்புக்கொடியை காட்டி வருகிறது. தும்கா, ராஜ்மகால் ஆகிய இடங்களில் முக்தி மோர்ச்சா கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகள். அத்துடன் கிரிதி, ஜம்ஷேத்புர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.