பெண்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை தரதரவென இழுத்து சென்ற போலீஸ்: பொள்ளாச்சியில் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும்  சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் மற்றும் பொறியியல்  கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று  பொள்ளாச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   பொள்ளாச்சி நகராட்சி  அலுவலகம் முன் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டு குற்றவாளிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு  மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். காலை  முதல் மாலை வரை  நீடித்த இந்த மறியல் போராட்டத்ததையடுத்து போலீசார்  ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் மனு  வழங்கினர். ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில்  ஈடுபட்ட மாணவர்களிடம் ஏடிஎஸ்பி மாடசாமி, வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு  குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என்று கூறினார். ஆனாலும்  மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் மாணவர்களை போலீசார்  வலுக்கட்டாயமாக  இழுத்து சென்றனர்.  

போலீசாரின் அத்துமீறல்களை மாணவர்கள் கண்டித்து கோஷம் எழுப்பியதால்  அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  போராட்டம் குறித்து மாணவர்கள்  கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4  பேருக்கும் அரசு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். தவறு  செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.  மேலும் பல ஆண்டுகளாக  இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தும் காவல்துறை கண்டுகொள்ளாமல்  இருந்தது கண்டனத்திற்குரியது. இவ்வழக்கில், மேலும் சிலருக்கு தொடர்பு  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பண பலம், அதிகார பலத்திற்கு  கட்டுப்படாமல் பராபட்சமின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாணவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை போலீசார்  வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கதக்கது என்றனர். இதேபோல, கோவை அரசு கலைக்கல்லூரி,    விழுப்புரம், திருப்பூர், உடுமலை, திருச்சி, தூத்துக்குடியிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: