திண்டுக்கல்: திண்டுக்கல் பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பூர் பாண்டி, கூலித் தொழிலாளி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பஞ்சு என்கிற பஞ்சவர்ணம் (40). இவர்களது மகன்கள் அசோக், சேகர் ஆவர். திருப்பூர் பாண்டி தனது மகன்கள், மனைவியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் தாலுகா போலீஸ் சரகம் நல்லாம்பட்டி நெசவாளர் காலனியில் உள்ள உறவினர் தங்கராஜ் வீட்டுக்கு வந்திருந்தனர். இன்று காலை அசோக், சேகர் ஆகிய 2 பேரும் காலை கடன்களை முடிப்பதற்காக வெளியே சென்று விட்டனர். திருப்பூர் பாண்டியும், பஞ்சவர்ணமும் உறவினர் வீட்டில் இருந்தனர். காலை 10 மணியளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தது. அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தங்கராஜ் வீட்டின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீடு சேதமடைந்தது. சத்தம் கேட்டு பஞ்சவர்ணம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு நின்ற 4 பேர் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவர்ணம் இறந்தார். சத்தம் கேட்டு திருப்பூர் பாண்டி வந்துள்ளார். மர்ம நபர்களை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். உஷாரான அந்த கும்பல் திருப்பூர் பாண்டியை ஓட ஓட அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.