அமைச்சர் ஆதரவாளர்களே பூத் கமிட்டியில் நியமனம் அதிமுக நிர்வாகிகள் கடும் மோதல் அன்வர்ராஜா எம்பி விரட்டியடிப்பு : வாட்ஸ் அப்பில் வைரலாவதால் பரபரப்பு

மதுரை: பூத்  கமிட்டி நியமனம் தொடர்பாக அதிமுகவின் இரு பிரிவினர் இடையே பாம்பனில் கடும்  மோதல் ஏற்பட்டது. சமரசம் செய்ய முயன்ற எம்பி அன்வர்ராஜாவை விரட்டியடித்ததால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. இச்சம்பவம் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடியில்  மீனவர்களுக்காக வலை பின்னும் கூடம் கட்டுவதற்கு தனது எம்பி நிதியின் கீழ்  அன்வர்ராஜா நிதி ஒதுக்கியுள்ளார். 5 ஆண்டுகளாக அமைதியாக இருந்து விட்டு,  தேர்தல் வரும் சூழ்நிலையில் அவசர அவசரமாக நிதி ஒதுக்கியுள்ளார் என  அப்பகுதி மீனவர்கள் ஏற்கனவே அதிருப்தியில் இருந்தனர். 2 நாட்களுக்கு முன்பு இந்த வலை பின்னும் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு  விழா, பாம்பன் தெற்குவாடி பகுதியில் நடந்தது. எம்.பி அன்வர்ராஜா பங்கேற்று,  புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

ராமநாதபுரம்  மாவட்டத்தில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணி நடந்து  வருகிறது. இதில் உள்ளூர் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்களே பெருமளவில்  நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எம்.பி அன்வர்ராஜாவின்  ஆதரவாளர்களும், மாவட்டச் செயலாளர் முனியசாமியின் ஆதரவாளர்களும் கடும்  அதிருப்தியில் இருந்தனர். அடிக்கல் நாட்டு விழா முடிந்த பின்னர்,  எம்.பி அன்வர்ராஜா புறப்பட்டார். அப்போது அதிமுக நிர்வாகிகளிடையே பூத்  கமிட்டி நியமனம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர்  கடுமையாக திட்டிக் கொண்டனர். நிர்வாகிகள் மோதலை கவனித்த அன்வர்ராஜா,  உடனடியாக காரில் இருந்து இறங்கி வந்து சமரசம் செய்ய முயன்றார். அப்போது ஒரு  தரப்பினர், அன்வர்ராஜாவிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில்,  ‘வயசுக்கு மரியாதை குடுங்கடா’ என்று அன்வர்ராஜாவின் ஆதரவாளர்கள் சத்தம்  போட்டனர். சிலர் தகாத வார்த்தைகளால் திட்டவே, அங்கு பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

மோதல் பெரிதாகி விடும் என அஞ்சிய அன்வர்ராஜா, உடனடியாக  காரில் ஏறி அங்கிருந்து தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடித்தார். அவர் சென்ற  பின்னரும் இரு தரப்பினரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர்  கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவர்களை சமாதானப்படுத்தி அசம்பாவிதம்  ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர். கடந்த 6  மாதமாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவினரிடையே கோஷ்டிபூசல்  அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமைச்சராக மணிகண்டன் பொறுப்பேற்ற பிறகு,  கோஷ்டி பூசல் அதிகரித்துவிட்டதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி  வருகின்றனர். இந்நிலையில் பாம்பனில் இந்த கோஷ்டி பூசல் வெடித்து  கிளம்பியதால், எம்.பி அன்வர்ராஜா கடும் அதிர்ச்சியில் உள்ளார். நிர்வாகிகள் மோதல் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: